இசை, ஓவியம், தையல் போன்ற கலைப்படிப்புகளை படித்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பாசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப் படும்; வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை ஏழை, கிராமப்புற பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.
தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி, இசை, தையல், ஓவியம் ஆகிய கலைகளை கற்றுத்தருவதற்காக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பணியிடங்கள் உருவாக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17.11.2014 ஆம் ஆண்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையில் இனி சிறப்பாசிரியர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்த புதிய நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வின் மூலம் நியமிப்பதே தவறானது என்ற கருத்து கல்வியாளர்கள் மற்றும் சமூகநீதியாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சிறப்பாசிரியர்களையும் தகுதித்தேர்வின் மூலம் நியமிக்க துடிப்பது சரியானதல்ல. இதன்மூலம் சிறப்பாசிரியர்களுக்கான கல்வித் தகுதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீண்டகாலமாக வேலைக்காக காத்திருப்பவர்களும், தமிழக அரசால் கடந்த 2012 ஆம் ஆண்டில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானோரும் 40 வயதைக் கடந்தவர்கள் ஆவர். இவர்களாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களாலும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கடினமானதாகும்.
இசை, ஓவியம், தையல் போன்ற கலைப்படிப்புகளை படித்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பாசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும். அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் 16,000 பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணிநிலைப்பு வழங்குவதுடன், இனி வரும் காலங்களிலும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில்தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அரசு அறிவிக்கவேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக