ஈரோடு: ''பள்ளி மாணவர்களுக்கு, இலவச லேப் டாப், சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, என்னை முறையாக அழைக்காவிட்டால் தொலைத்து விடுவேன்,'' என, சி.இ.ஓ.,வை, அ.தி.மு.க., எம்.பி., செல்வகுமார சின்னையன் எச்சரித்தார். ஈரோட்டில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச லேப் டாப், சைக்கிள் வழங்கும் விழா, வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர், சந்திரசேகரன் வரவேற்றார்; சி.இ.ஓ., அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், 294 பேருக்கு, லேப் டாப்; 305 பேருக்கு சைக்கிள்கள் ஆகியவற்றை, எம்.எல்.ஏ., ராமலிங்கம், ஈரோடு எம்.பி., செல்வகுமார சின்னையன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிகள் முடிந்து, தன் கார் அருகே வந்த, எம்.பி., செல்வகுமார சின்னையன், அங்கு நின்று கொண்டிருந்த, சி.இ.ஓ., அய்யண்ணனை அழைத்து, ''பள்ளி நிகழ்ச்சிகளுக்கு, என்னை அழைக்க வேண்டுமென தெரியாதா? முறையாக அழைப்பு கொடுக்க தெரியாதா?'' என்றார். அதற்கு, சி.இ.ஓ., அய்யண்ணன், ''அரசு பள்ளிகளில் நடக்கும் இதுபோன்ற விழாக்களை, நாங்கள் நடத்துவதில்லை. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே நடத்துவதால், அவர்கள் தான் பொறுப்பு,'' என்றார். இதனால், கோபமடைந்த எம்.பி., ''அதைப் பற்றி எனக்குத் தெரியாது; எனக்கு தெரிவிக்கா விட்டால், நீங்கள் தான் பொறுப்பு. எனக்கு, எங்கு பேச வேண்டும் என தெரியும். உன்னை தொலைத்து விடுவேன்,'' என, கோபமாக, சி.இ,ஓ.,வை எச்சரித்து விட்டு சென்றார்.சி.இ.ஓ., வை, பலர் முன்னிலையில், ஒருமையிலும், மரியாதையற்ற வார்த்தையிலும், எம்.பி., பேசியதால், அங்கிருந்த அதிகாரிகள், கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி, அ.தி.மு.க., எம்.பி., செல்வகுமார சின்னையனிடம் கேட்டபோது, ''நான், அவரிடம் கேள்வி தான் கேட்டேன். ஏன், கேள்வி கேட்கக் கூடாதா? அவரிடம், சத்தம் போடவில்லை. இதையெல்லாம், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?'' என, கோபமாக, மொபைல் இணைப்பை துண்டித்துக்கொண்டார்.எம்.பி., ஆகி மூன்று மாதம் ஆவதற்குள், அவர் விடுத்த மிரட்டல் குறித்து, அ.தி.மு.க.,வினரே, போயஸ் கார்டனுக்கு 'பேக்ஸ்' அனுப்பத் துவங்கியுள்ளனர்.
www.sstaweb.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக