முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

இருபுறமும் சிக்கித் தவிக்கும் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்

மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், நிர்வாக ரீதியான மூவகை கட்டமைப்புக்கும், கவுன்சிலர்களின் உட்கட்சி அரசியலுக்கும், பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், 1.4.1990 முதல் அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டனர். அப்போது முதல் இவ்வகை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்கள், டி.ஆர்.பி. அல்லது பள்ளிக் கல்வித்துறை மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன.

மதுரையில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என 67 பள்ளிகளில், 950க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளனர். ஆனால், அரசு நலத்திட்டம் வழங்கல், விளையாட்டு விழா நடத்துவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவது போன்ற பல்வேறு நிலைகளில், முதன்மை கல்வி அலுவலகம், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் என மூன்று வகை கட்டமைப்புகளுக்கும் பதில் அளிக்க வேண்டியுள்ளது.

உதாரணமாக, அரசு வழங்கும் நலத்திட்ட விவரங்களை மூன்று வகையாக தயாரிக்க வேண்டியுள்ளது. ஆனால் அரசு பள்ளிகள் இவ்வகை விவரங்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வழங்கினால் போதுமானது. அதேபோல், மூவகை நிர்வாகங்கள் கேட்கும் தகவல்களையும் தனித்தனியே வழங்க வேண்டியுள்ளது.

ஆனால், அதற்கு தகுந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை வசதியும் இல்லை.மேலும் வார்டு கவுன்சிலர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்ப நடத்தும் விழாக்களிலும், மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், பல பள்ளிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்கவில்லை. இதை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

மாநகராட்சி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், கல்வித் துறை உத்தரவுப்படி நடக்கின்றன. ஆனால் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்த மூவகை கட்டமைப்புகளுக்குள் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. மூவகை நிர்வாகங்களும் பல்வேறு பணிகளுக்காக எங்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.

ஆனால் 24 ஆண்டுகளாக, சம்பளத்தில் பிடித்தம் செய்து, மாநகராட்சி பொது நிதியில் சேர்க்கப்படும் பொது சேமநல நிதிக்கான (ஜி.பி.எப்.) கணக்கு சிலிப் கேட்டு போராடுகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் நடத்த கோரியும் போராட வேண்டியுள்ளது. மாநில அளவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக