முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

தகுதித் தேர்வு தகுதியானதா? - ஆந்தை ரிப்போர்ட்டர்

ஆசிரியர் பணிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தகுதித் தேர்வு குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டும் கல்வித்துறை அசைந்து கொடுப்பதாக இல்லை. எனினும் மீண்டும் ஒரு முறை பரிசீலித்தால் நல்லது.
ஆசிரியர் பணிக்கு வருகிறவர் பாட அறிவைவிட கற்பித்தலில் சிறந்து விளங்க வேண்டும். அதாவது தனது பாட அறிவை, சரியான முறையில் கற்பித்தால்தான் மாணவர்களின் புரிந்துகொள்ளும் ஆற்றலை வளர்க்க முடியும்.
மாணவர்களுக்குப் பாடங்களைச் சரியாகப் புரியவைப்பதில்தான் ஆசிரியரின் வெற்றியே இருக்கிறது. அவ்வாறெனில் தகுதித் தேர்வு, போதனை முறைக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். அதைவிடுத்து மீண்டும் மீண்டும் பாட அறிவையே சோதிப்பதால் எப்படி தகுதியான ஆசிரியர் கிடைத்துவிடுவார்?
உதாரணமாக ஆங்கில மொழிப் பாடத்தில் மொத்தமுள்ள 30 வினாக்களில் 29 வினாக்கள் இலக்கண அறிவைச் சோதிப்பதாகவே உள்ளன. கற்பித்தல் முறையைச் சோதிக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
கற்பித்தல் முறைகளான புரிந்துகொள்ளும் திறன், எழுத்தாற்றல், வாக்கியங்களை அமைக்கும் திறன், பேச்சுத் திறன், பல்வேறு கற்பித்தல் முறைகளில் திறன், உச்சரிக்கும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் கேள்விகள் அந்தத் தாள்களில் இல்லையே? ஆசிரியர்களின் கற்பித்தல் ஆற்றலையும், மாணவர்களின் கற்கும் ஆற்றலையும் எவ்வாறு கணக்கிடுவது?
இடைநிலை ஆசிரியர்களுக்கு முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையுள்ள பாடத்திட்டத்திலிருந்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலுள்ள பாடத்திட்டத்திலிருந்தும்தானே கேள்விகள் இடம்பெற வேண்டும்? இதை கவனத்தில் கொள்ளாமல் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டால் என்னாவது?
இப்படிக் கேட்பது ஆசிரியர்களின் தரத்தைத் சோதிப்பதைவிட வேலைவாய்ப்பில் வடிகட்ட மட்டுமே உதவும்.
சிறந்த முறையில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு தேவையில்லை. வேலைவாய்ப்பை மனதில் கொண்டு தேர்வு வைப்பதானால் சிறந்த கற்பித்தல் திறன்பெற்ற ஆசிரிய வல்லுனர்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கட்டும். அதுவும் அந்தந்த நிலை பாடத்திட்டத்திலிருந்து! கற்பித்தல் முறை குறித்து அதிக வினாக்கள் இருக்க வேண்டும். இத்தகைய தேர்வு முறையே ஆசிரியர் தகுதித் தேர்வின் தீர்வாக இருக்க முடியும்!
கலைப்பித்தன், கடலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக