ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான சம்பளத்தொகை வழங்க கோரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வனிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஓவியம், இசை ஆசிரியர்களான பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வீதம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் 2013ம் ஆண்டு ஏப்ரல், ஜூன் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்தும் கூட மே மாத ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. மேலும் பணி நியமன ஆணையில் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பணி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு கோவை, திருப்பூர், விழுப்புரம், உடுமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அனைத்து மாதங்களிலும் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஏப்ரல், ஜூன் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என பகுதி நேர ஆசிரியர்கள் புகார் கூறி வந்தனர்.
இதுகுறித்து ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 546 பகுதி நேர ஆசிரியர்களும் தங்களுக்கு விடுபட்ட 2 மாத சம்பளத்தை பிடித்தம் செய்யாமல் வழங்கக் கோரி ஏற்கனவே ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ.,) கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், இதுவரையிலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை சம்பளம் வழங்காமல் இருந்ததால் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வத்திடம் நேரில் மனு கொடுத்திருக்கிறோம்.
எங்கள் மனுவை பரிசீலித்து நிலுவையிலுள்ள 2 மாத சம்பளத்தை வழங்க அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நன்றி - தினகரன்
நன்றி - தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக