முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 30 டிசம்பர், 2013

முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வாய்ப்பு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

சேலம்: "தொடக்கக்கல்வியில் பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 2004-05ம் ஆண்டு வரை, இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் வகுப்பு வரை மட்டும், இடைநிலை ஆசிரியர்கள் நியமிப்பது எனவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு அந்தந்த பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது எனவும் அரசு முடிவெடுத்தது.

அதன்படி தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில், 2005ம் ஆண்டில் இருந்து, 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு, மாநில முன்னுரிமை அடிப்படையில், 50 சதவிகித முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக்கல்வி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

தொடக்கக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வித்துறை செயல்பட்டாலும், அதை தனி யூனிட்டாகவே கருதி, தனி நிர்வாகம் நடந்து வருகிறது. இதனால், தொடக்கக்கல்வித்துறையின் கீழ் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு என்பது கானல்நீராகவே உள்ளது.

முதுகலை ஆசிரியர் நியமனத்தில், தங்களுக்கும் பதவி உயர்வு வாய்ப்பு வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

ஒரே சமயத்தில், டி.ஆர்.பி., தேர்வெழுதி பணிநியமனம் பெற்ற நிலையில், உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில், அவர் தலைமை ஆசிரியராகவும், மாவட்டக்கல்வி அலுவலராகவும் மாற வாய்ப்பு உள்ளன. ஆனால், தொடக்கக்கல்வித்துறையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், கடைசி வரை பட்டதாரி ஆசிரியர்களாவே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதை மாற்றி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரச நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், 50 சதவிகிதம் நேரடி நியமனமாகவும், 50 சதவிகிதம் பதவி உயர்வு மூலமாகவும் நியமிக்கப்படுகிறது. இதில் நேரடி நியமன விகிதத்தில் எங்களுக்கும் சில சதவிகிதம் ஒதுக்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக