முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 16 மார்ச், 2015

கற்பித்தல் பணி மட்டும் செய்ய விடுவீர்

ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப்பணியாகும்.அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும் பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை.முழுச்சுதந்திரம்,புத்தாக்க முயற்சிகளை அங்கீகரித்தல்,மாணாக்கரின் ஈடுபாடு,பெற்றோரின் இடைவிடாத ஒத்துழைப்பு,கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு மற்றும் சமுதாயத்தினரின் போதுமான பங்களிப்புகள் போன்றவை அவற்றின் முக்கிய காரணிகளாகும்.இவை நாடு முழுவதிலும் காணப்படும் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் செவ்வனே கிடைக்குமானால் கல்வியில் இந்தியத் துணைக்கண்டம் தன்னிறைவுபெற்று உலகளவில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடிக்குமென்பது உறுதி.அவ்வெண்ணம் ஈடேறாமல் தடுக்க எண்ணிலடங்காத் தடைக்கற்கள் இங்கு மலிந்துக் கிடக்கின்றன.

அனைவருக்கும் உரிய,உகந்த கல்வி அளிப்பதைப் புறந்தள்ளி உடல் நலம்,மன வளம்,கற்கும் திறன்,தனியாள் வேற்றுமை,அனைத்துத் துறைகளுக்கான வாய்ப்பு வசதிகளின்மை பற்றி கிஞ்சித்தும் கவலைகொள்ளாமல் குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளிருந்து உருவாக்கப்பட்ட பொதுப்பாடத்திட்டத்தை நாடு முழுமைக்குமுள்ள மாணவர்களிடம் குறுகிய கால இடைவெளியில் அடைவுபெறச் செய்ய அறிவுறுத்துவதும் எதிர்நோக்குவதும் தவறானவை.மாற்றுத்திறனாளிகள்,கற்றல் குறைபாடுடையோர் ஆகியோருக்கான இவ் ஒருங்கிணைந்த,உள்ளடக்கிய நடப்புக் கல்வியின் பாடத்திட்டங்களும் அவற்றின் கற்றல்-கற்பித்தல் செயல்முறைகளும் சற்றும் பொருந்தக்கூடியனவாக அமையவில்லை என்பது கண்கூடு.இத்தகைய அறைகூவல்கள் உளவியல் ரீதியாக ஆசிரியரை முதலில் முடமாக்கவல்லவை.மாணாக்கரின் அறிவாற்றல்,நுண்ணறிவுத் திறன் ஆகியவற்றிற்கேற்ப விருப்பு வெறுப்பிற்கிடமின்றி வலிந்து திணிக்கும் எல்லோருக்குமான இலவச,கட்டாய,சமச்சீர் பொதுக்கல்விமுறையில் தக்க திருத்தம் மேற்கொள்வது அவசியமெனலாம்.

அளவிற்கரிய வரங்களை வாரித்தந்து ஒருவனைத் துளியும் வாழவிடாமல் செய்வதைப்போன்ற விசித்திரம் வேறில்லை.அதுபோல,போதிய கட்டடம்,காற்றோட்டமிக்க வகுப்பறை,துடிப்பும் துறுதுறுப்பும் நிறைந்த மாணவர்கள்,குறைபாடிருப்பினும் காண்போர் கவனத்தை ஈர்க்கும் பாடநூல்கள்,சிறந்த கற்றல்-கற்பித்தல் கருவிகள்,நல்ல சூழல் அனைத்தும் இருந்தும் என்ன பயன்?தகுதியும் திறமையும் ஒருங்கே நிறைந்த அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணியேற்ற ஆசிரியப் பெருமக்களை அரசே பணிபுரிய விடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்?

கல்வித்துறை சாராத பிற துறைகளில் பணிபுரிவோருக்கு அவரவர் சார்ந்த துறைகளில் மட்டுமே முழுக்கவனமும் துறைசார் வேலைகளும் இருக்கும்.மற்ற துறைசார்ந்த பணிப்பளு அதிகம் இருக்க வாய்ப்பில்லை.அதுபோலவே,தமக்குக் கொஞ்சங்கூட தொடர்பில்லாத துறைகளின் தாக்கமும் நெருக்கடியும் அத்தகையோருக்கு நேர்வதென்பது மிகவும் குறைவு.அரிதாக அவை அமைந்திடும் பட்சத்தில் அயல்பணியாகக் கணக்கில் கொள்ளப்பெறும்.அவ் அயல்பணிக்காலத்தில் நிலுவையிலுள்ள தாய்த்துறைப் பணிகள் வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு முடிக்கப்படுவதென்பது வாடிக்கை.

அதேசமயம்,உயிரும் உணர்வும் கொண்டு எதிர்காலம் குறித்த ஆசைகளையும் கனவுகளையும் தன்னகத்தே சுமந்து வாழும் ஏழை,எளிய,விளிம்புநிலைக் குழந்தைகளைக் கடைத்தேற்றும் தலையாயப் பணிபுரிந்திடும் ஆசிரியச் சமூகத்தினருக்குப் பிற துறையினர் தரும் நெருக்குதல்கள் சொல்லிமாளாதவை.புள்ளியியல் துறைசார்ந்த பொருளாதார,மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளுதல்,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்ந்த சாதிச்சான்று உள்ளிட்ட மூவகைச்சான்றுகளுக்கான முன்னேற்பாடுகள்,வாக்காளர் சேர்க்கை-நீக்கல்,பாராளுமன்ற,சட்டமன்ற,உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்துதல் மற்றும் வாக்கு எண்ணிக்கை,பள்ளிக் கட்டடம்,குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள்,சுற்றுச்சுவர்,அவ்வப்போது நிகழும் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கப் பணிகள்,பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி,மேசை,அலமாரி முதலான பொருள்கள் வாங்குதல் மற்றும் பாதுகாத்தல் மட்டுமின்றி இவைகுறித்த பதிவேடுகளையும் ரசீதுகளையும் முறையாகப் பராமரித்து பல்வேறு உள்ளுர்,வெளியு+ர் தணிக்கைகளுக்குத் தக்க ஒத்துழைப்பு வழங்குதல் என்பவை தக்கச் சான்றுகளாகும்.

மேலும்,பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்,ஆதிதிராவிட,மாற்றுத்திறனாளிகள்,பீடித்தொழிலாளர்கள் மற்றும் மனிதக்கழிவைச் சுத்தம் செய்வோரின் குழந்தைகள் ஆகியோரின் நலத்துறை சார்ந்த உதவித்தொகைகள்,நலத்திட்டங்கள்,நிதியுதவிகள் முதலானவற்றை முறையாகப்பெற்று உரியவர்களிடம் சேர்ப்பித்தலும் ஆசிரியரின் கூடுதல் வேலைகளாகும்.இவையனைத்தும் ஒழுங்காக ஈடேறிட அருகாமையிலுள்ள அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றோர் அல்லது மாணவர் பெயரில் கணக்குத் தொடங்கித் தருதலும் அப்புத்தகங்களைப் பத்திரப்படுத்தி வைத்தலும் முக்கியமானவை.அஞ்சல் துறை சார்ந்த வளரும் மாணவர் சேமிப்புத் திட்டம் மற்றும் சிறுசேமிப்பு ஆகியவற்றைத் திறம்பட பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களிடம் இயக்கமாகக் கொண்டுசென்று சேமிப்புப் பழக்கத்தின்மீது ஈடுபாடு கொள்ளவைத்தலானது மிகுந்த சிரமம் தரும் ஒன்றாகும்.

மின் கட்டணம் செலுத்துதல்,கணிணி,தொலைக்காட்சிப்பெட்டி,டிவிடி சாதனம்,தலைமேல் பட வீழ்த்தி இயந்திரம் முதலிய நவீன கற்றல்,கற்பித்தலுக்கு உதவும் தகவல் தொடர்பு கருவிகள் பழுதுநீக்கம்,கழிப்பிட மற்றும் சுற்றுப்புறத்தூய்மை,பள்ளிச் சிறார் நலத்திட்டம் சார்பில் பயனாளர் அட்டை எழுதுதல்,பதிவேடு பராமரிப்பு,அயோடின் சத்துக் குறைபாடு கண்டறிதல்,பார்வைக் குறைபாடு கண்டறிதல் மற்றும் குறைநிவர்த்திக் கண்ணாடி பெற்று வழங்குதல்,பதின்பருவ சிறுமிகளுக்கு மாதவிடாய்க் கால நவீன பாதுகாப்பு உபகரணம் அளித்தல்,சத்துணவு மேற்பார்வை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்தல்,இலவசப் பேருந்துப் பயண அட்டை பெற்றுத் தருதல் உள்ளிட்ட வேலைகளும் அடக்கம்.

ஆண்டுதோறும் அரசால் அந்தந்த பள்ளிகளுக்குரிய மாவட்ட,வட்டார அளவில் அமைந்திருக்கும் கல்வி அலுவலகங்களில் மும்முறை வழங்கப்படும் அனைத்துப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் உரிய விலையில்லா பாடப்புத்தகங்கள்,பாடக்குறிப்பேடுகள்,சீருடைகள்,புத்தகப்பைகள்,காலணிகள்,உலக வரைபடப் புத்தகம்,வண்ணப் பென்சில்கள்,கணித வடிவியல் பெட்டி,மடிக்கணிணி,மிதிவண்டி,விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றை தத்தம் சொந்த செலவிலும் பொறுப்பிலும் எடுத்துவந்து யாதொரு சிக்கலுமின்றி அனைவருக்கும் சரியாகப் பங்கிட்டுக் கொடுத்தல் என்பது ஆசிரியர்களுக்கு இலகுவான வேலையல்ல.சில நேரங்களில் அவர்கள் பல பேரிடம் வீண் பொல்லாப்பைச் சம்பாதிக்க நேரிடும்.

உயர் அலுவலர்களாலும் வட்டார வள மையங்களாலும் தொடர்ந்து தொடர்ச்சியாக அடிக்கடி கூட்டம் போட்டும் தொலைப்பேசி வாயிலாகவும் போதிய கால அவகாசம் அளிக்காமல் கோரப்படும் பல்வேறு வகைப்பட்ட புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஒழுங்குப்படுத்தித் தயாரித்துக் கொடுப்பதற்குள் ஆசிரியருக்கு உலக ஆசைகள் அற்றுவிடும் எனலாம்.இதற்கே ஓராண்டின் பாதிவேலைநாட்கள் கழிந்துவிடுவதாக ஆசிரியர் சங்கங்களிடையே அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்ததுண்டு.தவிர,ஆசிரிய நண்பர்கள் பலரைக் கல்வி அலுவலர்கள் தத்தம் எடுபிடிகளாகவும் வாகன ஓட்டிகளாகவும் சக ஆசிரியர்களிடம் இலஞ்சம் வாங்கிப் பெற்றுத்தரும் இடைத்தரகர்களாகவும் உருமாற்றி வைத்துள்ள இழிவுப்போக்குகள் களையப்பட வேண்டியவை.

தானியங்கி ஊதியப் பட்டுவாடா முறையினைப் பல கல்வி அலுவலகங்கள் ஆசிரியர்களைப் பள்ளிப்பணியாற்ற விடாமல் முழுநேர அலுவலகக் காவலர்களாகவும் மற்றுமொரு கடைநிலை ஊழியர்களாகவும் எழுத்தர்களாகவும் கொத்தடிமைகளாகவும் தினக்கூலிகளாகவும் பணிசெய்யப் பணிக்கப்படுவது வேதனைக்குரியதாகும்.
இவை தவிர,அரசால் அவ்வப்போது புதிதுபுதிதாக அறிவிக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு போதுமான ஆக்கமும் ஊக்கமும் கட்டாயம் பெற்று ஆசிரியர் பேரினத்தைப் பங்குபெறச் செய்துவிடும் நிலைமை அண்மைக்காலம் வரை மறையவில்லை.மேலும்,ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் பரிந்துரைத்ததற்கு மாறாக நியாயமாகக் கிடைக்கப்பெற வேண்டிய ஊதியத்தை வழங்க மறுப்பதும் அநீதி இழைப்பதும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வாடிக்கையாக உள்ளன.ஒரே பதவிக்குத் தகுதி மட்டும் ஒன்று.ஆனால்,மத்திய அரசு ஆசிரியரின் ஊதியத்தைவிட மாநில அரசு ஆசிரியரின் ஊதியம் ஏறக்குறைய பத்தாயிரம் ரூபாய் குறைவாகும்.எனினும்,ஊதியம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்றே படுகிறது.இல்லையேல் போராட்டத்திலேயே அவர்களின் பலநாட்கள் கழிந்து போயிருக்கும்.என்றாலும்,இவ் ஊதிய முரண்பாடுகள் காலத்தில் களையப்பெற்று நிவர்த்தி செய்வது அரசின் தலையாயப் பணியாகும்.

பல்வேறு மனச்சிக்கல்களுக்கும் புறவெளி நெருக்குதல்களுக்கும் ஆட்பட்டு சொல்லிலடங்காத் துயரத்துடன் கருமமே கண்ணாகக் கருதி அரும்பாடுபட்டு நாட்டுக்குழைக்கும் நல்லோராக ஆசிரியர்கள் விளங்கிவருவது இச்சமுதாயம் பெற்ற பெரும்பேறாகும்.ஆசிரியரை ஆசிரியராகப் பணிச் செய்யவிடாமல் இடையு+று செய்வதென்பது சகித்துக்கொள்வதற்கில்லை.நாடு வளமுற,நாட்டுமக்கள் நலமுற ஒவ்வொரு ஆசிரியரின் பங்கும் அளப்பரியது.அத்தகையோர் இச்சமுதாயத்தினரிடம் தொன்றுதொட்டு வேண்டிக்கேட்டுக்கொள்வது இது ஒன்றுதான்.

‘அரைப்பணியாக அல்லாமல் முழுநேரமும் எங்களை ஆசிரியப்பணி மட்டும் செய்திட விட்டுவிடுங்கள்.ப்ளீஸ்!’

முனைவர் மணி.கணேசன்
11-2,ராஜீவ்காந்தி நகர்
மன்னார்குடி-614001
9442965431.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக