பதிவு செய்த நேரம்:2014-10-13 10:36
திருச்சி : பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.
பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அதிமுகவினர் பல்வேறு போராட்டம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் திருச்சியில் நேற்று நடத்தப்பட்டது.
திருச்சி மண்டலத்தை சேர்ந்த 85 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் சார்பில் 85 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. சிலவற்றை தபால் பெட்டியில் செலுத்திவிட்டு, மற்ற அனைத்தையும் மூட்டையாக கட்டி அஞ்சல் அலுவலகத்தில் வழங்கினர். இதற்காக அவர்கள் தெப்பகுளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்று திரண்டனர்.
இப்போராட்டத்துக்கு மாநில அமைப்பாளர் சேசுராஜா தலைமை வகித்தார். மாநில சேர்மன் சோலைராஜா சிறப்புரையாற்றினார். தலைவர் பசுபதி, செயலாளர் ராஜா தேவ்கான், பொருளாளர் ஜான்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் வரவேற்றார்.
பணி நிரந்தரம்
போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நியமனம் செய்த நாளில் இருந்து பணிப் பதிவேடு உருவாக்க வேண்டும். பெண்களை திருமணம் செய்து செல்லும் ஊருக்கே இடமாறுதல் அளிக்க வேண்டும். ரூ.20 ஆயிரம் வீதம் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக