தமிழக அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பணியமர்த்தப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
ஊதியம் மின்ணணு பட்டுவாடா முறையில், அனைவருக்கும் கல்வி இயக்க நிதியிலிருந்து தொகுப்பூதியமாக மாதா மாதம் தினக்கூலி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு, தற்செயல் விடுப்பு ஆகியவற்றிற்கு ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது, ஆளும் கட்சியினர், தொகுப்பூதியம் ரூ. 10,000 (பத்தாயிரம்) ஆக உயர்த்தப்படும். விரைவில் பணிநிரந்தரம் செய்யப்பட்டு பணிவரண்முறை செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
ஆனால், 2014 - 15 ஆம் கல்வி ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அறிக்கையில், ஊதியம் ஏழாயிரமாக மட்டுமே உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வறிப்பு 1.4.2014 முதல் செயல்படுத்தப்பட்டு, ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், செப்டம்பர் முதல் 7000 ஆகவும் வழங்ககப்பட விரைவில் ஆணை வெளியிடப்படும் என்று அதிகாரிகளால் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த செப்டம்பர் மாத ஊதியம் தாமதமாகிறது. இதுவரை ஆணை வெளியிடப்பட வில்லை. விடுமுறைக்கால ஊதியம், நிலுவைத்தொகை வழங்கல், உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கல், போனஸ் வழங்கல் போன்றவற்றிற்கான ஆணை வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையால், பண்டிகைக்காலத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். விலைவாசி உயர்வும் வெகுவாக பாதித்துள்ளது.
தமிழக அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்று ஓய்வூதியதாரர்கள் உட்பட மாநில அரசு ஊழியர்களுக்கும் 107% அகவிலைப்படியை வழங்கி, சுமார் 18 இலட்சம் ஊழியர்களை பயனடையச் செய்துள்ளது.
ஆனால் 15,169 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் எவ்வித பணப்பயனுமின்றி, தாமதமாக, சொற்ப ஊதியத் தொகையாக ரூபாய் 5,000 மட்டுமே பெற்று விலைவாசி உயர்வையும் எதிர்கொள்ள இயலாமல் தவிக்கின்றனர்.
ஆகையால் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உடனடியாக பன்னிரண்டாயிரமாக உயர்த்தி ஆணை பிறப்பித்து, விலைவாசிப்படிவழங்கி பல ஆசிரியர் சங்கங்களின் நன்றியை பெற்றதுபோல், பகுதிநேர ஆசிரியர்களின் நன்றியைப் பெறுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
- செய்தித்தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக