சிவகங்கை:''மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், அலவன்ஸ் வழங்க வேண்டும்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஐ.ஏ.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு செல்லும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தொகுப்பூதியத்தில், 3 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு காலமுறை சம்பளம் தர வேண்டும்.
தமிழகத்தில், 10 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களது பதவி உயர்வு, பணியிடமாற்றம் போன்றவற்றில், ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.
அரசு பணிகளில் கான்ட்ராக்ட் மற்றும் 'அவுட் சோர்சிங்' முறையை தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்களின் ஊதியக்குழு முரண்பாட்டை அரசு நீக்க வேண்டும்.மத்திய அரசு ஊழியருக்கு வழங்குவது போல், 7 சதவீத அகவிலைப்படி மற்றும் இதர அலவன்ஸ், சம்பளம் உள்ளிட்டவற்றை, மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.
தமிழகத்தில், 56 வகையான மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கேற்ற ஊழியர்கள் அலுவலகங்களில் இல்லை. மாநில அளவில், 2 லட்சம் காலிபணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும்.
ஊழியர்களின் கோரிக்கை குறித்து, ஊழியர் சங்க நிர்வாகிகளுடன், அரசின் தலைமை செயலர் மற்றும் நிதித்துறை செயலர்கள் ஆலோசனை நடத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, அக்., 17 முதல் 19ம் தேதி வரை, நாகப்பட்டினத்தில் கோரிக்கை மாநாடு நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக