ஓய்வூதியம், காலமுறை ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் சென்னையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கோவை மாவட்டத் தலைவர் எல்.செந்திலகுமார் தலைமையில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் என்.நேரு, மாநிலப் பொருளாளர் கே.செங்கோட்டுவேல், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஏ.குழந்தைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, ஓய்வுபெற இருக்கின்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் அரசாணை 408-ன்படி தவிர்ப்பு வழங்கி, அவரவர் பகுதி நேரமாகப் பணிபுரிந்த பகுதிநேர பணிக்காலத்தில் 50 சதவீதத்தைக் கொண்டு ஓய்வூதியம் பெறும் வகையில் ஆணை வெளியிட வேண்டும்.
தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக