ஜெயலலிதாவின் 3 ஆண்டு கால ஆட்சியில் 53 ஆயிரத்து 288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு அமைச்சர் கே.சி. வீரமணி பதில் அளித்து கூறியதாவது:–
2011–-12 ஆம் ஆண்டில் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டு, ஒரு பள்ளிக்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் 195 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டு அப்பள்ளிகளுக்கு 710 தலைமை ஆசிரியர்கள், 3550 பட்டதாரி ஆசிரியர்கள், 710 இளநிலை உதவியாளர்கள், 710 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவ, மாணவியர்களுக்கு ஒவியம், தையல், இசை பயிற்சிகள் அளிப்பதற்காக 15,169 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
2013-–14 ஆம் ஆண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்பட்டு, 54 தலைமையாசிரியர்களும் 54 இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 300 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. அந்தப் பள்ளிகளுக்கு 300 தலைமை ஆசிரியர்களும் 900 முதுகலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக