தமிழக சட்டமன்ற கூட்டம் ஜூன் 2-வது வாரத்தில் தொடங்குகிறது. கூட்டத்தில் கடந்த கூட்டத்தின் போது ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளை நடத்த முடிவுகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சி, அடுத்த மாதம் ஜூன் 2-வது வாரத்தில் தொடங்குகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது.
2011-12-ம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013-14-ம் ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை மூன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2014-15-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 13-ந் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார். நிதி நிலை அறிக்கை தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதம் ஆகிய நிகழ்வுகள் சிலநாட்கள் மட்டுமே நடைபெற்றன. நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக இருந்த நிலையில், நிதிநிலை கூட்டத்தொடரின், துறை ரீதியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள் அப்போது ஒத்தி வைக்கப்பட்டன.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் அடுத்த மாதம் ஜூன் இரண்டாம் வாரத்தில் ஒரு நாளில் தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக