ஆத்தூர்: மல்யுத்த போட்டிகளில், தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை குவித்த, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர், தேசிய மல்யுத்த போட்டிக்கு, தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, நாகியம்பட்டி கிராமத்தை சேர்ந்த, கூலித் தொழிலாளி மகாலிங்கம் மகன் மாயக்கண்ணன், 28. அவர், ஆத்தூர் அருகே, ராமநாயக்கன்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 2006 முதல், மல்யுத்த போட்டியில் பங்கேற்பதற்காக, பயிற்சி எடுக்க துவங்கினார். 2008ல், தமிழக அளவில், கன்னியாகுமரியில் நடந்த மல்யுத்த போட்டியில், தங்கப்பதக்கம் வென்றார்.
பின்னர், 2011ல், ராஜபாளையத்திலும், சில மாதங்களுக்கு முன், கன்னியாகுமரியில் நடந்த, மாநில அளவிலான மல்யுத்த போட்டியில், தங்கப் பதக்கம் வென்றார்.
கோல்கத்தாவில், வரும், 14 முதல், 17ம் தேதி வரை நடக்கும், தேசிய அளவிலான, 57வது மல்யுத்த போட்டிக்கு, தமிழகத்தில் இருந்து, 12 மல்யுத்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், ஆசிரியர் மாயக்கண்ணனும் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் மாயக்கண்ணன், போட்டியில் வெற்றி பெற, ராமநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில், மாலை அணிவித்து, கேக் வெட்டியும், வழிபாடு செய்து, அனுப்பி வைத்தனர்.
அப்போது, உடற்கல்வி ஆசிரியரும், மல்யுத்த வீரருமான மாயக்கண்ணன் கூறியதாவது:
"மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று சாதனை செய்வதற்காக பயிற்சி பெற்றேன். மாநில, மாவட்டம், மண்ட அளவிலான மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு, மூன்று தங்கம், எட்டு வெள்ளி, ஆறு வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றுகள் பெற்றேன்.
கோல்கத்தாவில் நடக்கும், தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதில், வெற்றி பெறும் நபர்கள், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வர். ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு, தங்கப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை தேடித் தருவதையே, எனது லட்சியமாக கொண்டுள்ளேன்." இவ்வாறு அவர் கூறினார்.
- நன்றி - தினமலர்
- நன்றி - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக