பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை கல்வியியல் மாணவ-மாணவிகள் முற்றுக்கையிட்டனர். தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசனிடம் மனுஅளித்தனர் .
அந்த மனு விபரம்: இளங்கலை கல்வியியலில் கணினி அறிவியல் படிப்பை தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 300 பேர் படித்து முடித்துள்ளோம். தமிழகத்தில் 1992-ம் ஆணடு முதல் தற்போது வரை 16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்வியியலில் கணினி அறிவியல் படித்துள்ளனர். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் எந்தவிதமான பணி நியமனமும் வழங்கவில்லை.
பகுதி நேர கணினி அறிவியல் ஆசிரியர் பணி நியமனத்தில் பி.எட். படிக்காதவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. பி.எட். கணினி அறிவியல் படிக்காதவர்களுக்கு பணி வழங்கினால், பி.எட். கல்வியியல் கல்லூரிகள் எதற்கு என்றும், பி.எட். படித்தவராகிய எங்கள் வாழ்க்கைக்கு என்ன வழி என்றும் வினா எழுப்பியுள்ளனர்.
மேலும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கணினி அறிவியல் ஒரு மையப் பாடமாக உள்ளது. அதுபோல, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கணினி அறிவியலை ஒரு பாடமாகக் கொண்டு, இவ்வருடம் முதல் பாடம் கற்பிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே, கணினி அறிவியல் படித்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என தனது மனுவில் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக