"அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பில்,கோவை மாவட்டத்துக்கு ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாநில திட்ட இயக்குநர் தெரிவித்தார்.எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் மகேஸ்வரன், கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள், மாற்றுத்திறனாளி சிறப்பு மையங்களில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, தொடக்க கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உடனிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும், மத்திய, மாநில அரசுகள் 65 -35 சதவீதம் என்ற பங்கீட்டு அளவில், எஸ்.எஸ்.ஏ.,ன் 14 வித பணிகளுக்காக நிதி ஒதுக்குகின்றன.
இந்த நிதியை, ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைக்கு தகுந்தபடி மாநில அமைப்பு பிரித்து வழங்கும். அதன்படி, கோவை மாவட்டத்துக்கு நடப்பு கல்வியாண்டில் 90 கோடியே 21 லட்சத்து 937 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 22.5 கோடி ரூபாய் குறைவு.
எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநர் மகேஸ்வரன் கூறுகையில்,"கோவை மாவட்ட எஸ்.எஸ்.ஏ.,க்கு போக்குவரத்து செலவினம், பள்ளி செல்லா குழந்தைகள் சிறப்பு பயிற்சி நிதி, புதிய ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் செலவினம், ஆசிரியர் பயிற்சி, கட்டடப் பணிகள், நிர்வாக மேலாண்மை உட்பட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 90 கோடியே 21 லட்சத்து 937 ரூபாய், நடப்பு கல்வியாண்டில், ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 16 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது." என்றார். கடந்த 2012-13ல் எஸ்.எஸ்.ஏ., செயல்பாடுகளுக்கு 112. கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 68 கோடியே 73 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிதி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக