முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

உதவியாளர்களாக நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர்கள்! அரசுப் பள்ளிகளில் அவலம் - நன்றி தினகரன் கல்வி மலர்


8/11/2016 8:39:07 AM



தமிழக அரசின் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ‘தொகுப்பூதிய ஆசிரியர்கள்’ என்று சொல்லப்படும் சிறப்பு ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளத்தில் ஏவல் ஆள் போல பயன்படுத்தப்படுகின்றனர். பல பள்ளிகளில் இவர்களைத் தலைமை ஆசிரியர்கள் விதிமுறைகளுக்கு மாறாகக் கொத்தடிமைகள் போல வேலை வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது பல உண்மைகள் தெரியவந்தன. யார் இந்தச் சிறப்பாசிரியர்கள்? கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசின் ‘அனைவருக்கும் கல்வித் திட்ட’த்தின் அடிப்படையில் தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்ற கம்ப்யூட்டர், தையல், உடற்பயிற்சி ஆகிய பிரிவுகளுக்கு 16,546 சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முதலில் ரூ.5 ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்பட்டது. இது பிறகு ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள், அரை நாள் மட்டும் பள்ளியில் பணியாற்றினால் போதும். ஆனால், பல பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரி யர்கள் கட்டாயப்படுத்தி இவர்களை முழு நாளும் பணியாற்ற வைக்கின்றனர். இது மட்டுமின்றி பள்ளிக்கான அனைத்து வெளி வேலைகளையும் சிறப்பு ஆசிரியர்களே செய்யும் சூழ்நிலை உள்ளது. பள்ளிக்குப் புத்தகம் வாங்குவது, சீருடைகள் வாங்குவது என மற்ற பணிகளுக்குச் சிறப்பு ஆசிரியர்களே அனுப்பப்படுகின்றனர். இதற்காக இவர்களுக்கு போக்குவரத்துப் படிகூட வழங்கப்படுவதில்லை. ‘அனைவருக்கும் கல்வித் திட்டம்’ விதித்துள்ள நிபந்தனைகள்படி, பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறைகள் தவிர, வேறு விடுமுறை எதுவும் கிடையாது. பணிக்காலத்தில் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது. வாரத்தில் 9 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.

தலைமை ஆசிரியரின் அறிவுரைப்படி காலை 9.30 மணி முதல் 12.30 வரை அல்லது பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வாரத்தில் மூன்று நாட்கள் பணியாற்றலாம். பள்ளிக்கு வராத நாட்களில் சம்பளம் பிடிக்கப்படும். “சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. சம்பளம் குறைவாக இருந்தாலும் பின்னாளில் எங்களது பணி முழு நேரமாக மாற்றப்பட்டு சம்பள உயர்வு கிடைக்கும் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் பணிகள் கொடுத்தாலும் மறுக்காமல் செய்து வருகிறோம். பள்ளியில் உதவி யாளர்கள் செய்ய வேண்டிய பணிகள், கணினி சார்ந்த பணிகள் என அரசு விதிகளைத் தாண்டி கூடுதலாகத்தான் பணியாற்றி வருகிறோம். பகுதி நேரப் பணியாளர்களாக இருப்பதால் நாங்கள் பணியாற்றும் பள்ளியில் ஏவல் அடிமைகளைப் போலப் பயன்படுத்தப்படுகிறோம். போதிய மரியாதை இல்லை.

பள்ளியில் கணினி தொடர்பான அத்தனை பணிகளையும் கணினி தொடர்பான சிறப்பு ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. பல நேரங்களில் பள்ளிகளில் தபால் கொடுக்கும் வேலையைக் கூட செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்தப் பயணங்களுக்காகவும் நாங்களே செலவழிக்க வேண்டியுள்ளது. குறைந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்ற நிலையில், இது தேவையற்ற செலவு. இந்த நிலை மாற அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் உரிய மரியாதையுடன் பணியாற்றும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று தொகுப்பூதிய ஆசிரியர்கள் குமுறுகின்றனர். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கிப்சன் இதுபற்றிப் பேசினார். ‘‘இந்த பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்கள் மத்திய அரசின் கல்வி உரிமைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

தமிழக அளவில் 9800 நடுநிலைப் பள்ளிகளும், 3500 உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன. பல அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதுபோன்ற இடங்களில் அந்தப் பணிகளில் இவர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் ‘200 மாணவர்கள் உள்ள பள்ளிகளில் இவர்களை முழுநேர ஆசிரியர்களாக மாற்றி பணி நிரந்தரம் செய்து தர வேண்டும்’ என்று கல்வி உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அப்படி யாரையும் பணி நிரந்தரம் செய்ததாகத் தெரியவில்லை. பணி உறுதித் தன்மை இருந்தால்தான் அவர்களால் நம்பிக்கையுடன் பணியாற்ற முடியும். அரசுப் பள்ளி களில் இவர்கள் பகுதிநேரமாகப் பணி புரிவதால் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் சொற்ப வருவாயில் தவித்து வருகின்றனர். இந்த நிலையை அரசு மாற்ற வேண்டும்’’ என்கிறார் கிப்சன். சிறப்பு ஆசிரியர்கள் வாழ்வு சிறப்பாக அமைவது அரசின் கையில்தான் உள்ளது !

- ஸ்ரீதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக