ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களில்ஆசிரியர்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் 95 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
5 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையம் வெளியிட்டது.ஆனால் இந்த பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள் எங்கும் கிடைப்பதில்லை என்று சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு எழுத உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் இந்த போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் 15169 பேர் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் 5253 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடத்துக்கு போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடக்கும் என்றுஆசிரியர் தேர்வு ஆணையம்(டிஆர்பி) அறிவித்துள்ளது. ஓவியர்களுக்கான பாடத்திட்டம் குளறுபடியாக உள்ளது என்று முதல்வருக்கு மனு அளித்துள்ளோம். எனவே போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். அதனால் போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ஓவியம், தையல், இசை, பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு மாநில பதிவு முன்னுரிமையை நடைமுறைப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராஜ்குமார் கேட்டுள்ளார். இந்த கோரிக்கை மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசாணை எண் 185ல் கூறப்பட்டுள்ளபடியே ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக