பட்டதாரி ஆசிரியருக்கு இணையாக உடற்கல்வி ஆசிரியருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர்கள் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, காமதேனு கலை, அறிவியல் கல்லூரிச் செயலாளர் பி.மலர்ச்செல்வி தலைமை வகித்தார். பிபிஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு குத்துவிளக்கேற்றி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில், தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கூட்டமைப்பின் தலைவர் சோலை எம்.ராஜா மாணவ, மாணவிகளுக்கு இலவச பந்துகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், அனைத்துப் பள்ளி மாணவர்களும் விளையாட வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு இலவச பந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விளையாட்டுத் திறனை உடற்கல்வி ஆசிரியர்களே வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளியிலும் உடற்கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியருக்கு இணையாக உடற்கல்வி ஆசிரியருக்கும் சம்பளம் வழங்கவேண்டும்.
பகுதிநேர உடற்கல்வி ஆசிரியரை நிரந்தரப் பணிக்கு மாற்றவேண்டும். உடற்கல்வி ஆசிரியர் அக்கவுண்ட் டெஸ்டில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசின் கொள்கை தவறானது. தற்போது காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சாரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் செயலாளர் ஏ.எஸ்.சக்தி பாலாஜி, மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.ராஜேந்திரன், மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக