பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் அச்சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் டி. ரவிச்சந்தர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு கணக்கு தேர்வு பகுதி- 1 தேர்வு என்ற விதியைத் தளர்த்தி உடற்கல்வி இயக்குநர் நிலை- 2 என்ற பதவி உயர்வை வழங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது.
அனைத்து உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தையும் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி பதவிஉயர்வு வழங்கும் வரை 6 முதல் 8}ம் வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி பாடத்தைக் கற்பிப்பது, 14 வயதுக்குட்பட்டோரை மட்டும் போட்டிகளுக்குத் தயார் செய்வது. முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பதவி உயர்வுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களை பணி மூப்பின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டை நகர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநில பொதுச் செயலர் டி. தேவிசெல்வம், பொருளாளர் வி. பெரியதுரை, தலைமை நிலையச் செயலர் ஆர். சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவரும், உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சோலை எம். ராஜா பேசினார்.
இதில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக