செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும்.
செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம், எண்டேவர் உள்பட சில ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
இந்தியாவின் ‘மங்கல்யான்’ விண்கலமும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து வருகின்றது.
இந்த நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க வைக்க ‘நாசா’ மையம் திட்டமிட்டு, அதற்கான பயிற்சியை தற்போது மேற்கொண்டு வருகின்றது. இப்பயிற்சி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக ஹவாய்தீவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விசேஷ கூண்டு ‘டூம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூண்டு 36 அடி அகலமும் 2 அடுக்கு மாடிகளையும் கொண்டது. இதில் 3 ஆண்கள், 3 பெண்கள் என 6 பேர் பயிற்சி பெறுகின்றனர்.
அவர்களின் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது. அங்கு அவர்களுக்கு தனித்தனி 6 சிறிய படுக்கை அறைகள் உள்ளன. மேலும் அவர்கள் அங்கு தங்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள சைக்கிள், டிரட்மில் எந்திரம் போன்றவை உள்ளன. தங்கியிருக்கும் 6 பேருக்கும் நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அதை வைத்து தான் அவர்கள் குடிக்க, குளிக்க, சமைக்க, மற்றும் உடைகளை சுத்தம் செய்ய போன்ற அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
மேலும் அவர்கள் அங்கிருந்து தங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இ–மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது. ஆனால் அந்த செய்தி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் கிடைக்கும்.
அதே நேரத்தில் வெளியில் இருந்து அனுப்பும் இ–மெயில் சென்றடைய 40 நிமிட நேரமாகும். செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பும் தகவல்கள் கிடைக்க மேற்கண்ட நேரமாகும் என்பதால் அதேபோன்று இங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், டச்சு நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனமும் வரும் 2024-ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை நிரந்தரமாக குடியேற்றும் ஆயத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு சென்று மனிதர்களால் வாழ முடியும் என்றாலும், அவர்களால் 68 நாட்களுக்கு மேல் அங்கு தாக்குப் பிடிக்க முடியாது என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மாசாச்சூசெட்ஸ் தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் சமர்பித்துள்ள ஒரு ஆய்வு அறிக்கையில், செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேறச் செல்பவர்கள் 68 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அங்கு குடியேறச் செல்லும் மக்களின் உணவுக்கு தேவையான செடிகளை வளர்க்கும்போது, செடிகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான ஆக்சிஜன் (பிராணவாயு) மனிதர்களின் உயிருக்கு தீங்காக மாறிவிடும். இந்த ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் இருந்து வெளியேற்றக்கூடிய தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படப்படாத தற்போதைய சூழலில், அங்கு 68 நாட்களுக்கு மேல் மனிதர்கள் உயிர்வாழ முடியாது என அந்த ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக