பள்ளிகளில் காகிதம் மற்றும் எழுதுபொருள் பயன்பாட்டை குறைக்கவும், தாமதத்தை தவிர்க்கவும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை அறிவிக்கும் திட்டங்கள், பள்ளி செயல்பாடு மற்றும் நடவடிக்கைகள், பள்ளிகளில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் உள்ளிட்டவை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து, பள்ளிகளுக்கு இ -மெயில் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.
தகவல் பெறும் பள்ளிகளும், அதே முறையில் கல்வி அலுவலகங்களுக்கு பதிலை அனுப்ப வேண்டும். சில பள்ளிகள், காகிதங்களில், அறிக்கையாக எழுதி தருவதால் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளில் புதிய சாப்ட்வேர் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி, பள்ளிகளும் கல்வி அலுவலகங்களும் தகவல் தொடர்பை இனி முழுமையாக தொடர வேண்டும்.
காகிதம், எழுதுபொருள் பயன்பாட்டை போதுமான வரை, பள்ளிகளிலும், கல்வி அலுவலகங்களிலும் குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கம்ப்யூட்டர் பிரிவு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பூர், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலை பள்ளியில் நடந்த பயிற்சிக்கு, முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் முன்னிலை வகித்தார். 300க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், கலந்துகொண்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் பேசுகையில், "பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வை, பொதுத்தேர்வு விதிமுறைகளின்படியே நடத்த வேண்டும். அறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். தேர்வு முடிவுக்கு பின், காலை மாலை நேரங்களில், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.
இடைத்தேர்தல் காரணமாக, அக்., 7 மற்றும் 8ம் தேதிக்கு தமிழ், ஆங்கில பாட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால், அக்., 13ம் தேதி காலாண்டு தேர்வு முடிவை கட்டாயம், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக