முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

தமிழ் இணையக் கல்விக்கழகக் கட்டடத்தில், 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கணித்தமிழ் ஆய்வுக்கூடம், கலையரங்கம், தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் படப்பிடிப்புத் தளம் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழ் இணையக் கல்விக் கழக கட்டடத்தில், 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கணித்தமிழ் ஆய்வுக்கூடம், கலையரங்கம், தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய படப்பிடிப்பு தளம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.


தகவல் தொழில் நுட்பவியல் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக, தமிழ் மொழியைப் பரப்புவதற்கு தகவல் தொழில் நுட்பவியல் துறையின் மூலம் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்காகவும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழி கற்க தேவையான வசதிகளை ஏற்படுத்திடவும், தமிழ் மொழியின் அடிப்படை ஆராய்ச்சிக்காகவும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது – தமிழ்நாடு அரசால் Tamil Virtual Academy எனப்படும் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கென, அந்த நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கணித்தமிழ் ஆய்வுக் கூடத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 85 சதுர அடி பரப்பளவில், கணிப்பொறி, இணைய வசதி மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 24 பணிக்கூடங்கள் கொண்ட உள்கட்டமைப்புப் பணிகள் – தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரத்து 682 சதுரஅடி பரப்பளவில் நூலகம், சேவையக அறை மற்றும் 13 அறைகளில் குளிர்சாதன வசதி, இணைய வசதியுடன் கூடிய நவீன கணிப்பொறிகள் கொண்ட தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் – தமிழ் இணையக் கல்விக் கழக கலையரங்கத்தில் கல்வித்திட்டங்கள் தொடர்பான கூட்டங்கள், மாதாந்திர தொடர் நிகழ்ச்சிகள், தமிழ் தொடர்பான கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவதற்கு ஏதுவாக, 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாயிரத்து 274 சதுர அடி பரப்பளவில் குளிர்சாதன வசதியுடன் 150 பேர் அமரக்கூடிய வகையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கணித்தமிழ் ஆய்வுக்கூடம், கலையரங்கம் மற்றும் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் ஆகியவற்றை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார். 

மேலும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், அதன் பாடத்திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் இணைய வகுப்பறை பாடங்களை ஒளிப்பதிவு செய்வதற்காக இரண்டாயிரத்து 274 சதுர அடி பரப்பளவில் குளிர்சாதன வசதியுடன் ஒலி, ஒளி அமைப்பு கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் திரு. என். சுப்பிரமணியன், அரசு தலைமைச் செயலாளர் திரு. மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலாளர் திரு. தா.கி. ராமச்சந்திரன், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் பேராசிரியர் ப.அர. நக்கீரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக