மக்கள் நலப் பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியபோது நிறுத்தி வைக்கப்பட்ட ஐந்து மாத ஊதியத் தொகையை நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் டி.மதிவாணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை மாற்றுப் பணியில் நியமனம் செய்யுமாறு உயர் நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், தமிழக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும், 2012-ஆம் ஆண்டு மே மாதம் வரை எங்களது பணியை
நீட்டிக்க வேண்டும் எனவும் தனி நீதிபதி அப்போது உத்தரவிட்டார். அதுவரை எங்களுக்குச் சேர வேண்டிய நலன்கள் அனைத்தையும் வழங்கவும் அந்த உத்தரவில் கூறப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பணியிலிருந்து நீக்கப்பட்டோம். அதனால், அன்று முதல் 2012-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி வரை 7 மாத ஊதியத்தை நாங்கள் இழந்து விட்டோம். எனவே, நாங்கள் பெற வேண்டிய ஊதியம் ஐந்து அல்லது ஏழு மாத ஊதியத் தொகையா என்பது குறித்து நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை தெளிவுபடுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஆக.28) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஐந்து மாத ஊதியத்தை நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக