பகுதி நேர சிறப்பாசிரியர்களிடம் பணி நியமனத்தின் போது தெரிவிக்கப்பட்டதை விட கூடுதல் வேலை வாங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த 2012 மார்ச்சில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் இசை, ஓவியம், தையல், கம்ப்யூட்டர், உடற்கல்வி, தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என, வாரம் மூன்று நாட்கள் ஒன்பது மணி நேரம், மாதம் 32 மணி நேரம் இவர்கள் வேலை செய்ய வேண்டும் என நியமனத்தின்போது கூறப்பட்டது.
இவர்களுக்கு மற்ற ஆசிரியர்கள் போல் மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு போன்ற எந்த விடுப்பும் கிடையாது.
இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மற்ற ஆசிரியர்களைப்போல பகுதி நேர ஆசிரியர்களும் வாரத்தில் ஆறு நாட்களும் வேலைக்கு வர வேண்டும், நாள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என தலைமையாசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்வதாக கூறுகின்றனர். மேலும் அவசர தேவைக்கு விடுமுறையும் வழங்க மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகையில், எங்களுக்கு என பாடப்பிரிவு ஒதுக்கி ஆசிரியர்களாக நியமித்தனர். ஆனால் பள்ளிகளில் எங்களை அலுவலக பணி செய்யவே அனுப்புகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் இல்லை என்பதால் அந்த பணிகளுக்கு அனுப்புகின்றனர். கல்வி அலுவலகங்களில் அலுவலர்களை பார்க்கவும், பணிகளை முடிக்கவும் நாள் முழுவதும் செலவிட வேண்டியுள்ளது. இதனால் மற்ற ஆசிரியர்களைப்போல் நாள் முழுவதும் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு எங்களின் பாடப்பிரிவு குறித்த வகுப்பு எடுக்க முடிவதில்லை.
தேர்வு கண்காணிப்பு, பிற பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லையெனில் அங்கு அனுப்புவது, மாணவர்களுக்கு பிற பாடங்கள் நடத்துவது, தலைமையாசிரிகளின் சொந்தப்பணிகள் என அனைத்து பணிகளையும் செய்ய வலியுறுத்துகின்றனர். குறைந்த சம்பளத்தில் மாதம் முழுவதும் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இந்த சம்பளமும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை. மற்ற ஆசிரியர்களைப் போலவே பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலை குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். நியமனத்தின் போது கூறப்பட்ட நேரப்படி, ஆசிரியர் பணி மட்டும் செய்ய அனுமதிக்கும்படி, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக