தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
பள்ளி கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கான பெரும் அளவு நிதியை, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.நடப்பு (2014 - 15) கல்வியாண்டில், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை, பல மாதங்களுக்கு முன், தமிழக அதிகாரிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கி இருந்தனர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து, புதிய ஆட்சியாளர்களிடம், தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில், சமீபத்தில், நடப்பு கல்வி ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., : அதன்படி, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனரகத்திற்கு, 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 12 ஆயிரம் ஆசிரியர் சம்பளத்திற்கு, 288 கோடி ரூபாய்; ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்க, 5 கோடி; பள்ளிகளுக்கு மானியமாக, 28 கோடி (ஆய்வக உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க) உள்ளிட்ட செலவுகள் அடக்கம். எஸ்.எஸ்.ஏ., : இந்தஇயக்குனரகத்திற்கு, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர் சம்பளத்திற்கு மட்டும், 900 கோடி ரூபாய் செலவிடப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய ஆரம்ப பள்ளிகள், ஏற்கனவே உள்ள பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், பள்ளிகளில், சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட, உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு, கணிசமான தொகை செலவிடப்படும் எனவும், அந்த அதிகாரி தெரிவித்தார்.
'கேட்பது கிடைக்கும்!'
அதிகாரி ஒருவர் கூறியதாவது:கல்வி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கேரளாவிற்கு அடுத்து, தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக, சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்தது குறிப்பிடதக்கது.
எனவே, மத்திய அரசிடம், தமிழகம் கேட்கும் நிதி, தாராளமாக கிடைக்கும்.கடந்த ஆண்டு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு, 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, 500 கோடி ரூபாய், கூடுதலாக ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக