முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 30 ஜூலை, 2014

1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: முதல்வர் தகவல்

சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர்இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

2. 2009 ஆம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமைக்கப்பட வேண்டும். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

3. கடந்த மூன்று ஆண்டுகளில், 760 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக, சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள்மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக