எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும், 14 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமா?' என, தமிழக அரசிடம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம், கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின், மாநில பொதுச்செயலர், தேவி செல்வம், வெளியிட்ட அறிக்கை:
விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக, தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால், அரசு பள்ளிகளில் உள்ள நிலை என்ன? அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 5,691 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உள்ள நிலையில், 3,700 பேர் மட்டுமே பணி புரிகின்றனர். மீதிஉள்ள இடங்கள், இதுவரை நிரப்பப்படவில்லை.
உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றில், 330 பேரும், நிலை இரண்டில், வெறும், 89 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். உடற்கல்வி இயக்குனர் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும், உடற்கல்வி ஆசிரியர் செய்து வருகின்றனர்.
கடந்த, 25 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை. 95 சதவீத உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில், சம்பளம் பெற்று வருவதால், பதவி உயர்வு செய்வதன் மூலம், அரசுக்கு நிதிச்சுமை வரப்போவது இல்லை.
ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையுள்ள, 7,651 அரசு நடுநிலைப் பள்ளிகளில், 13.83 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, வெறும், 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
போதிய உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படாததால், பல்வேறு விளையாட்டுகளில், திறமையான கிராமப்புற மாணவர்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க, ஒரு பள்ளிக்கு, ஒரு உடற்கல்வி ஆசிரியரையாவது நியமிக்க, அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக