முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 10 மார்ச், 2014

652 கணினி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்

தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதோடு, மேலும் 175 பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் இருந்தால் அந்த இடங்களையும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையிலேயே நிரப்பலாம் எனவும், எதிர்காலங்களில் இந்தப் பணியிடங்களை அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப நிரப்பலாம் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதனடிப்படையில் 1999-ஆம் ஆண்டு 1,332 ஆசிரியர்களும், அதற்கடுத்த ஆண்டு 1,062 ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

எல்காட் நிறுவனம் இந்த ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தது. இவர்களின் ஒப்பந்தக் காலம் 2006-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பிறகு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி இவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முடிவு எடுத்தது.

ஆனால், இந்த முடிவு பி.எட். படிக்காத தாற்காலிக ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்வதற்காக எடுக்கப்பட்டது எனக் கூறி பி.எட். படித்த கணினி ஆசிரிய பட்டதாரிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சிறப்புத் தேர்வை நடத்த அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், அதன் முடிவு நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டது.

அதன்படி, 12.10.2008 ஆம் தேதி சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 1880 பேரில் 1,686 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் 894 பேர் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணான 50 சதவீதத்துக்கு மேல் எடுத்திருந்தனர். 792 பேர் 35 சதவீதத்துக்கும் 50 சதவீதத்துக்கும் இடையில் மதிப்பெண் எடுத்திருந்தனர்.

இந்த வழக்கில் கருணை அடிப்படையில் 50 சதவீதத்துக்கும் கீழே மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அப்போதைய தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், இந்த முடிவு தன்னிச்சையானது எனக் கூறி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

ஆனால், 35 சதவீதத்துக்கு மேலாகவும், 50 சதவீதத்துக்கு உள்ளாகவும் மதிப்பெண் எடுத்தவர்கள் நலனைக் கருதி மற்றுமொரு சிறப்புத் தேர்வை நடத்தலாம் என அனுமதி வழங்கியது.

அதன்படி, 24.01.2010 ஆம் தேதி கணினி ஆசிரியர்களுக்கான மற்றுமொரு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 50 சதவீதத்துக்கும் கீழ் மதிப்பெண் எடுத்த 792 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத் தேர்வில் 140 மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள 652 பேர் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிக்கப்பட்டனர். எனவே, சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத 652 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது 652 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

இவர்கள் அனைவருக்கும் தங்களது பணி நீக்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையோ, பணி நிரந்தரம் கோரும் உரிமையோ கிடையாது எனவும், நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை இவர்கள் பணியில் தொடரலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல், இவர்களை இப்போது நடைமுறையில் உள்ள முறையின் அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் சனிக்கிழமை (மார்ச் 7) பிறப்பித்த உத்தரவு:

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டால், இந்த 652 பேரில் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை இப்போது கூற முடியாது.

ஏனென்றால், சிறப்புத் தேர்வில் தோல்வியடைந்தவர்களின் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிப்பதற்கு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்தால் தகுதியானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற வாதத்தையும் ஏற்கமுடியவில்லை.

ஏனென்றால், இந்த முறையில் பணி நியமனம் செய்தால் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி நீதிமன்றத்தை யாரும் அணுகவில்லை.

எனவே, கடந்த 2009 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் 652 பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற ஆணையை படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக